நீட்விலக்கு: புதிய சட்டம் பரிசீலனை! விஜயபாஸ்கர்

சென்னை :

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசின்  புதிய சட்ட முன்வடிவை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வு இந்த ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதையடுத்து,  நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், தமிழக அரசின் சட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்லூரி இடங்களை பெறும் வகையில், மருத்துவ கல்வியில் 85சதவிகித உள்ஓதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக, தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக டில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.

தமிழகத்திற்கு இந்த ஆண்டு விலக்கு கோரி பிரதமர் மோடியையும் சந்தித்து வலியுறுத்தினர். இதையடுத்து, தமிழக அரசு சார்பாக புதிய சட்டமுன்வடிவு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது,

நீட் தேர்விலிருந்து நடப்பாண்டு விலக்களிக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பிரதமரும், மத்திய அமைச்சர்களும் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளதாகவும், தமிழக அரசு அளித்துள்ள புதிய சட்ட முன் வடிவு மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும்  கூறினார்.