மத்தியஅரசு அறிவிப்புகளை மாநில மொழிகளில் வெளியிட வேண்டும்! உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி உத்தரவு!

மதுரை: மத்திய அரசின் அறிவிப்புகள் அனைத்தும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  மத்தியஅரசின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என மத்தியஅரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

சமீப காலமாக மத்தியஅரசின் அறிவிப்புகள் இந்தியில் வெளியாகி வருகின்றன. மும்மொழிக்கொள்கையை ஊக்குவிக்கும் வகையில், மத்தியஅரசு மறைமுகமாக இந்தியை திணித்து வருகின்றன.  இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்களை கண்டித்த  ஆயுஷ் செயலாளரின் அடாவடி  பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுபோல, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஹிந்தியில் பதில் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. திமுக எம்.பிக்கள் வில்சன் மற்றும் சு. வெங்கடேசன் ஆகியோர் உள்ஒதுக்கீடு விவகாரம் குறித்து எழுதிய கடிதத்திற்கு, இந்தியில் பதில் கடிதம் வந்தது. இதை  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அதுபோல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்தை அமித்ஷா இந்தியில் அனுப்பியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த  மத்திய அரசின் அறிவிப்புகளை தமிழில் வெளியிடக்கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்க இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழியில் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.