Random image

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோலுக்கு வாட் வரியை குறைக்க திட்டம்….மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி:

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ தாண்டி விட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதை கண்டித்து கடந்த 10ம் தேதி காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய முழு அடைப்பு போரட்டம் நடத்தியது.

இது பாஜக.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. விரைவில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலிக்கும் என்று பாஜக கணித்துள்ளது. அடுத்து நாடாளுமன்ற தேர்தலும் வர உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தால் தேர்தலில் வெற்றி பாதிக்கப்படுமோ என்று பாஜக கருதுகிறது. இது குறித்து பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் விலை உயரும் போது மத்திய- மாநில அரசுகளின் மதிப்பு கூட்டு வரியும் (வாட்) உயர்கிறது. இதன் காரணமாக தான்பெட்ரோல்- டீசல் விலை உச்சத்தை தொட்டு நிற்கிறது. வாட் வரியை குறைத்தால் பெட்ரோல்- டீசல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தலாம் என்ற ஆலோசனை கூறப்பட்டுள்ளது. மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தற்போது அறிவுறுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலை சந்திக்கும் பாஜக ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் வாட் வரி ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களும் வாட் வரியை குறைக்க முடிவு செய்துள்ளன. இதே போல் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் வாட் வரியை குறைக்க நடவடிக்கை குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தான் வாட் வரி அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிக வருவாய் கிடைப்பதால் வாட் வரியை குறைக்க பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.