தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு….விபரங்களை வெளியிட மறுப்பு

டில்லி:

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இது குறித்த விபரங்களை வெளியிட மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றிய விபரம் வருமாறு…..

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.

ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்? – ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். – அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம் – அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம் – அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும் – எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர்.

இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும்.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் இது குறித்த விபரங்களை வெளியிட மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

அஞ்சலி பரத்வாஜ் என்பவர் இது குறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இ ந்த மாதம் மனு அளித்திருந்தார். இதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அதிகாரிகள் அளித்துள்ள பதிலில்,‘‘தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ல் திருத்தம் செய்வது பரிசீலனையில் உள்ளது. இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதனால் இது குறித்த தகவல்களை தற்போதைய நிலையில் அளிக்க இயலாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்கப்பட்ட கேள்விகள்…

சட்ட திருத்தம் குறித்த திட்ட அறிக்கை எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது.

இது எந்த தேதியில் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மீது எந்த தேதியில் அமைச்சரவை முடிவு எடுத்தது.

சட்ட திருத்த திட்ட அறிக்கை நகல் வழங்க வேண்டும்.

அமைச்சரவை முடிவின் நகல் வழங்க வேண்டும்.

இது போன்ற கேள்விகள் அஞ்சலியின் தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பத்தில் கோரப்பட்டிருந்தது.

இது குறித்து அஞ்சலி பரத்வாஜ் கூறுகையில், ‘‘அனைத்து விதமான சட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பொது இணைய தளத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே மக்களின் கருத்துக்களை பெறும் வகையில் வெளியிட வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் சட்டத் திருத்தத்தை மக்கள் பார்வைக்கு விட மத்திய அரசு தயாராக இல்லை’’ என்றார்.