டில்லி:

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை வரியை குறைத்து, அதே நேரம் புதிதாக சாலை வரி விதித்துள்ளது மத்திய அரசு. பெட்ரோல் டீசல் மீதான அடிப்படை கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. அதன் மீதான கூடுதல் கலால் வரியில் லிட்டருக்கு ரூ. 6 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லிட்டருக்கு ரூ. 8 அளவுக்கு விலை குறையும் என்று நிதி அமைச்சர் ஜெட்லி தெரிவித்தார்.

அதே நேரம் புதிதாக சாலை வரி என்று ரூ. 8 வரி விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

இது குறித்து, நிதித்துறைச் செயலாளர் ஹஸ்முக் ஆதியா, “பெட்ரோல், டீசல் விலையில் கலால் வரியைக் குறைத்து, சாலை வரி விதித்திருக்கிறோம். இதனால் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று நாடகம் என்று மா.கம்யூ பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மேலும், “வலது கையால் கொடுத்துவிட்டு இடது கையால் பிடுங்குகிறது மத்திய அரசு.

கடந்த வாரத்தில் ஏழரை ரூபாய் வரை விலையை உயர்த்திவிட்டு, இரண்டு ரூபாய் குறைத்தது இன்னொரு நாடகம்” என்றும் அவர் தெரிவித்தார்.