புதுடெல்லி: சர்ச்சைக்குரிய மற்றும் ஆத்திரமூட்டக்கூடிய பதிவுகள் மற்றும் கணக்குகளை டிவிட்டரிலிருந்து நீக்கத் தவறியதற்காக, அதன் உயர்நிலை நிர்வாகிகள், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று, டிவிட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “அரசு தரப்பில் கேட்டுக்கொண்ட பின்னரும், சர்ச்சைக்குரிய மற்றும் ஆத்திரமூட்டக்கூடிய பதிவுகள் மற்றும் கணக்குகளை நீக்குவதில் தாமதம் செய்வதானது, இந்திய தகவல்தொழில்நுட்ப சட்டத்தின்படி குற்றமாகும்.

நாங்கள் டிவிட்டர் நிர்வாகத்துடன் ஒத்துழைப்பை விரும்புகிறோம். அவர்கள், சில விஷயங்களில் எங்களின் கோரிக்கையை ஏற்றிருக்கிறார்கள். ஆனால், பல கோரிக்கைகள் தொடர்பாக, அவர்களிடமிருந்து எந்த பதிலும் வருவதில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள அமைப்பான டிவிட்டர், இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் கோபத்தை சம்பாதித்துள்ளது. அந்தக் கமிட்டி, டிவிட்டர் நிறுவனர் ஜாக் டார்சேவிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தும், அவர் இதுவரை அவற்றுக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, டிவிட்டர் நிறுவனம், இந்திய சட்டத்திற்கு பணிந்து நடக்க வேண்டும் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி