புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசின் சார்பில் ரூ.2570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் அடிப்படை சேவைகளை வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதில் நகரப் பகுதிகளுக்கு ரூ.1,629 கோடியும், ஊரகப் பகுதிகளுக்கு ரூ.940 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் வாரியாகப் பார்த்தால், தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஆந்திராவிற்கு முதல் தவணையாக ரூ.431 கோடி மற்றும் இரண்டாவது தவணையாக ரூ.870.2363 கோடி நிதியும், ஒடிசாவிற்கு முதல் தவணையாக ரூ.186.58 கோடி நிதியும், மேகாலயா மற்றும் நாகலாந்துக்கு 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான நிதியாக முதல் தவணையில் முறையே ரூ.1.515 கோடி மற்றும் ரூ.6.115 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு முதல் தவணையாக ரூ.16.215 கோடியும், இரண்டாவது தவணையாக ரூ.70.57 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகையில், அனைத்துப் பகுதிகளுக்கும் மொத்தமாக சேர்த்து ரூ.2,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.