பருப்பு உற்பத்தி அதிகரித்தும் இறக்குமதியை குறைக்காத மத்திய அரசு

டில்லி

நாட்டில் பருப்பு வகைகள் தட்டுப்பாடு ஏற்பட்ட போது இறக்குமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசு தட்டுப்பாடு நீங்கிய பின்னும் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.

கடந்த 2016 ஆம் வருடம் பருப்பு வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.   அதை ஒட்டி பருப்பு வகைகளின் விலை தாறுமாறாக ஏறியது.   பருப்பு வகைகளின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு மோசாம்பிக் அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.  அதே போல் கென்யா உள்ளிட்ட நாடுகளுடனும் ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன் பிறகு நாட்டில் பருப்பு உற்பத்தி அதிகரித்தது    சிறிது சிறிதாக பருப்பு விலைகள் குறையத் தொடங்கின.   அத்துடன் அரசு தரப்பிலும் கொள்முதல்கள் அதிகரிக்கப்பட்டது.   தற்போது அரசு  கோடவுன்களிலும் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களிலும் தேவைக்கு மேல் பருப்பு வகைகள் இருப்பில் உள்ளன.

கடந்த திங்கள்கிழமை வெளிநாட்டு வர்த்தகத் துறை இயக்குனரகம்  ஒரு புதிய இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது.  அதன்படி துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஒவ்வொன்றும் 1.5 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட உள்ளன.   ஏற்கனவே கோடவுன்களில் அதிக இருப்பு உள்ள நிலையில் இந்த வருடம் சுமார் 2.4 கோடி டன்கள் பருப்பு உற்பத்தி இருக்கும் என விவசாய ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தகத் துறை இயக்குனர் அலோக் சதுர்வேதி, “பருப்புகள் இறக்குமதிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.   அது நீண்ட கால ஒப்பந்தமாகும்.  அதனால் உடனடியாக இறக்குமதியை நிறுத்த முடியாது.  அத்துடன் இதனால் அரசு பருப்பு வகைகள் கொள்முதல் செய்வதை நிறுத்தப் போவதில்லை, அதனால்  விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.