நெல்லுக்கு ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியது.

டில்லி

நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.    இதை ஒட்டி விவசாயிகள் விளைப் பொருட்களுக்கு விலை உயர்வு கேட்ட வண்ணம் உள்ளனர்.  பிரதமர் மோடி கடந்த வாரம் விவசாயிகளுடன் அவர்கள் குறையை கேட்டு இருந்தார்.   அப்போது அவர்கள் தங்கள் விளைப்பொருளான நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு விலை உயர்வு தேவை என கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் விரைவில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப் படும் என உறுதி அளித்தார்.   இன்று இதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது.   அந்த கூட்டத்தில் இது குறித்து விவாதம் நடந்துள்ளது.   அத்துடன் விவாத முடிவில் ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நெல் விலை ஏற்கனவே இருந்த விலையில் இருந்து குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.1750 ஆக்கப்பட்டுள்ளது.    அதே போல மக்கா சோளத்துக்கு ஆதாரவிலை ரூ. 1425 ல் இருந்து ரூ.1700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   இது தவிர சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.250 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகளில் துவரம் பருப்புக்கான ஆதார விலையில் குவிண்டாலுக்கு  ரூ.225 உயர்த்தப்பட்டுள்ளது.  பாசிப்பயிறு உள்ளிட்ட மற்ற பயிர் வகைகளுக்கும் ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.   இந்த விலை உயர்வால் மத்திய அரசுக்கு ரூ. 15 கோடி செலவு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.