நேரு நிதி அலுவலகத்தை அவர் வீட்டில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவு

டில்லி

நேரு நினைவு நிதி என்னும் அலுவலகத்தை நேருவின் இல்லத்தில் இருந்து காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார்.   இவர் டில்லியில் தீன் மூர்த்தி பவன் என்னும் இல்லத்தில் வசித்து வந்தார்.   நேருவின் மறைவுக்குப் பின் அவர் வாழ்ந்த இந்த இல்லத்தில் அவர் நினைவாக உள்ள அருங்காட்சியகம் மற்றும் ஒரு நூலகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

அதே கட்டிட வளாகத்தில் வெளியில் உள்ள கட்டிடங்களில் ஒன்றில் ஜவகர்லால் நேரு நினைவு நிதி அலுவலகம் இயங்கி வருகிறது.   இந்த அலுவலகம் கடந்த 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை நேருவின் இல்ல வளாகத்தில் அமைந்துள்ளது.  இந்நிலையில் மத்திய பாஜக அரசு இந்த கட்டிடத்தில் இருந்து இந்த அலுவலகத்தை வெளியேற நோட்டிஸ் அனுபி உள்ளது.

அந்த நோட்டிசில்,  கடந்த 1967 ஆம் வருடம் லால் பகதூர் சாஸ்திரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்”.  அதில் அந்த இல்லத்தில் இயங்க வேண்டிய அலுவலகங்கள் குறித்து விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி அதில் இந்த அலுவலகத்தின் பெயர் இல்லாததால் இந்த அலுவலகத்தை காலி செய்ய வேண்டும்” என மத்திய அரசு கூறி உள்ளது.

இதற்கு அலுவலகம் அளித்த பதிலில், ”கடந்த 1967 ஆம் வருடம் ஜூலை மாதம் 14 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தின் அறிவிப்பின் படி தீன்மூர்த்தி பவன் என்னும் கட்டிடத்தினுள் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் இயங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   ஆனால் எங்கள் அலுவலகம் வளாகத்தினுள் உள்ளதே தவிர அந்த கட்டிடத்தில் அமையவில்லை.

இந்த அலுவலகம் பல ஏழை மக்களுக்கு கல்வி உள்ளிட்ட பல நிதி உதவிகளை நேருவின் பெயரால் செய்து வருகிறது.  எனவே, அவர் வசித்த இல்லத்தின் அருகே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டது.    இந்த அலுவலகம் கடந்த 1964 முதல் இங்கு இயங்கி வருகிறது.   அத்துடன் இந்த அலுவலகம் இயங்கும் கட்டிடம் முழுக்க நிதி அலுவலகத்துக்கு சொந்தமானதாகும்.   எனவே இங்கிருந்து அரசு வெளியேறச் சொல்வது தவறானதாகும்.” என பதில் அளித்துள்ளது.