டில்லி

ண்ணெய் நிறுவனங்கள் தர வேண்டிய ரூ.19000 கோடி ஈவுத் தொகையைக் கடன் வாங்கி அளிக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு கேட்டுள்ளது.

அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனங்களில் தனியார் முதலீடும் இடம் பெற்றுள்ளது.   எனவே அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஈவுத் தொகை வழங்கி வருகிறது.    தற்போது  அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.   அதற்கேற்ப ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையை மத்திய அரசு பெற்றுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களில் லாபத்தை கணக்கிட்டு அரசுக்கு ஈவுத் தொகையாக ரூ.19000 கோடி வர வேண்டும் என கணக்கிட்டு அதனை உடனடியாக அரசுக்குச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.   இந்த கணக்கில் லாபம் அதிகமாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்களில் அரசின் முதலீட்டைக் குறைத்து வரும் வேளையில்  ஈவுத் தொகையும் அதிக அளவில் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொகையில் கிட்டத்தட்ட 60% அளவுக்கு ஒ என் ஜி சி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்க வேண்டியது உள்ளது.  அதாவது ஓ என் ஜி சி ரூ.6500 கோடியும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.5500 கோடியும் அளிக்க வேண்டி உள்ளது.  மீதம் உள்ள தொகையில் பாரத் பெட்ரோலியம் ரூ.2500 கோடி, கெய்ல் ரூ.2000 கோடி,  ஆயில் இந்தியா ரூ.1500 கோடி மற்றும் எஞ்சினியர்ஸ் இந்தியா ரூ.1000 கோடி தர வேண்டியதாக உள்ளது.

தற்போது எண்ணெய் நிறுவனங்களும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகத் தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு இந்த நிறுவனங்கள் கடன் வாங்கி அரசுக்கு ஈவுத் தொகை அளிக்க வேண்டும் எனக் கூறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஈவுத் தொகையை குறைக்கக் கோரி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன    இவ்வாறு அரசு குறைத்தால் தங்கள் நிறுவனத்துக்குக் கடன் சுமை அதிகரிக்காது எனவும் அந்நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.