டில்லி

கொரோனா தடுப்பூசி வழங்குவதைச் சுலபம் ஆக்க குழு அமைக்குமாறு மாநிலங்களை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி சோதனைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்த வருடம் முதல் கொரோனா தடுப்பூசிகள் முழு அளவில் உற்பத்தி செய்யப்படும் எனவும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.   தற்போது நாடெங்கும் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி தேவை அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.  அதில் அவர் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி வழங்குதலைச் சுலபமாக்கக் குழுக்கள் அமைக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.  இந்த குழுக்கள் அந்தந்த மாநிலத் தலைமைச் செயலர், சுகாதார முதன்மைச் செயலர் மற்றும் மாவட்ட தலைமை ஆகியோர் தலைமையில் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்

மேலும் அக்கடிதத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து அவை பரவலாகக் கிடைக்கும் போது அனைத்து தரப்பினருக்கும் இந்த தடுப்பூசி கிடைக்க இந்த குழு பணி புரிய வேண்டும் எனவும் சமூக வலைத் தளங்கள் மூலம் இந்த தடுப்பூசி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்னும் தவறான தகவலைத் தடுத்து உண்மை நிலையை அறியச் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.