பள்ளி கேண்டின்களில் பாக்கெட் நொறுக்குத் தீனிக்கு மத்திய அரசு தடை

டில்லி

ஜன்க் ஃபுட் என அழைக்கப்படும் பாக்கெட் நொறுக்குத் தீனி மற்றும் குளிர் பானங்களைப் பள்ளி உணவு விடுதிகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாட்டில் மாணவர்களிடையே ஜங்க் ஃபுட் எனப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தீனிகளால் அவர்களுக்கு ஆரோக்கியமற்ற உடல் பருமன் ஏற்படுவதுடன் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்ரீதியான குறைபாடுகளும், தன்னம்பிக்கையின்மை போன்ற மனரீதியான குறைபாடுகளும் ஏற்படுகின்றன.   இதைத் தடுக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ஒரு குழுவை அமைத்தது.

ஐதராபாத் நகரைச் சேர்ந்த தேசிய ஊட்டச்சத்து நிலைய இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட   இக்குழு ஆய்வை முடித்துக் கொண்டு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது.   அந்த அறிக்கையில், பள்ளி குழந்தைகளிடையே உடல் பருமனும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உபாதைகளும் அதிகரித்து வருவது குறித்து குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதையொட்டி மத்திய அரசு ஜங்க் புட் என்பதற்கான வரையறைக்குப் பொருந்துகிற அனைத்து தின்பண்டங்களையும் நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்பதற்குத் தடை விதித்துள்ளது.   அத்துடன் பள்ளிகளில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள், பள்ளி நேரத்தின்போது, இந்த தின்பண்டங்களைக் கடைக்காரர்களோ, நடைபாதை வியாபாரிகளோ விற்பதற்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது.

அது மட்டுமின்றி பள்ளியில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கடைகள் மற்றும் உணவு விடுதிகள், இந்த தின்பண்டங்களை விற்பனைக்கு வைத்திருந்தால், அவற்றைச் சீருடை அணிந்த பள்ளி குழந்தைகளுக்கு விற்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.