டில்லி

டந்த 118 நாட்களாக டில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் 3 மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாஜக அரசு அறிவித்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லி எல்லையில் அரியானா, உபி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   டில்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் நடைபெறும் இந்த போராட்டம் 118 நாட்களாகியும் முடிவுக்கு வரவில்லை

இந்த போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கும் விவசாய பிரதிநிதிகளுக்கும் இடையே 11 சுற்றுப் பேச்சு வார்த்தை நடந்து அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.    விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு மறுத்து வருகிறது.  இதனால் போராட்டம் தொடர்கிறது.

டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மூன்று மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   இந்த கட்டண இழப்பு கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த வருடம் மார்ச் வரை ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி, “விவசாயிகள் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்துவதால் ரூ.815 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த இழப்பு பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளது.  இதில் பஞ்சாபில் ரூ.487 கோடி, அரியானாவில் ரூ.328 கோடி மற்றும் ராஜஸ்தானில் ரூ.1.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வேறு மாநிலங்களில் இந்த போராட்டத்தால் இழப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.