டில்லி

லேசிய பாமாயில் இறக்குமதிக்கு இந்திய எண்ணெய் இறக்குமதியாளர் சங்கத்துக்கு அரசு தடை விதிக்கவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 

சமீபத்தில் நடந்த ஐநா பொதுக் குழுக் கூட்டத்தில் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதித்து மனித உரிமை மீறல்கள் நடத்துவதாக இந்தியாவை பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.  அங்கு மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது பாகிஸ்தானை ஆதரித்துப் பேசினார்.   அத்துடன் இந்தியா ராணுவத்தின் மூலம் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தார். இது இந்தியர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியது.

இந்திய எண்ணெய் இறக்குமதியாளர் சங்கத்தில் 85 உறுப்பினர்கள் உள்ளனர்  அவர்கள் சுமார் 3 கோடி டன் அளவுக்கு எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்கின்றனர்.  இதில் அதிக அளவில் அதாவது 30 லட்சம் டன் அளவுக்கு பாமாயில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

மலேசிய அதிபர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசியதை அடுத்து இந்திய எண்ணெய் இறக்குமதியாளர் சங்கம் மலேசிய பாமாயில் இறக்குமதியைத் தடை செய்துள்ளது.  இதனால் மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் பணி இழக்கலாம் என பல எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்தன.  மலேசியாவில் அதிக அளவில் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழக மக்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிலக அமைச்சர் பியுஷ் கோயல், “மலேசிய பாமாயில் இறக்குமதி தடை குறித்து எனக்கு எதுவும் தெரியாது.  சங்கத்தினருக்குக் காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு பிடிக்காமல் இருந்திருக்கலாம்.  காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் அதில் மலேசியா தலையிடுவதை சங்கத்தினர் விரும்பாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் அரசு மலேசிய பாமாயில் இறக்குமதிக்குத் தடை விதிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.