காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு கூறியுள்ள யோசனை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலம் தான்  தங்களின் தீர்ப்பை செயல்படுத்த முடியும் என்று காவிரி நடுவர் மன்றம் தெளிவாக கூறியிருந்த நிலையில், அதற்கு மாறாக மேற்பார்வை வாரியம் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இது கண்டிக்கத்தக்கதாகும்.

மத்திய அரசு அமைக்கப்போவதாக கூறியிருக்கும் மேற்பார்வை வாரியம் எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பு ஆகும். அந்த அமைப்பால் நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது. மாறாக மேற்பார்வை மட்டுமே செய்யும். அப்படியானால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை யார் செயல்படுத்துவார்கள்? காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் அமைந்துள்ள கர்நாடக அரசு தான் செயல்படுத்தும்.
காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்குவதில்லை; அதன் தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது என்பது தான் நூறாண்டுகளுக்கும் மேலாக கர்நாடகம் மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாற்று ஆகும். இதற்கு எதிராகத் தான் தமிழக அரசும், உழவர்களும்  கடுமையாகப் போராடி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டுமானால் பக்ரா&பியாஸ் வாரியத்திற்கு இணையாக கர்நாடகத்தில் உள்ள அணைகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டுமென்று நடுவர் மன்றம் கூறியுள்ளது. அத்தகைய அமைப்பு தான் காவிரி மேலாண்மை வாரியம் ஆகும். உச்சநீதிமன்றமும் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் காவிரி சிக்கலை தீர்க்க மேலாண்மை வாரியம் தான் சரியான அமைப்பு என்று கூறியிருந்தது. ஆனால், இப்போது கர்நாடகத்தில் கட்டுப்பாட்டில் தொடர்ந்து அணைகளை வைத்துக் கொள்ள வகை செய்யும் அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
கர்நாடகத்தின் கட்டுப்பாட்டில் அணைகள் இருந்தால், அதை மேற்பார்வை செய்ய எத்தகைய வலிமையான அமைப்பை ஏற்படுத்தினாலும் அதன் உத்தரவுகளை கர்நாடகம் மதிக்காது. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்தும் விஷயத்தில் கூட பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பை கர்நாடகம் செயல்படுத்தவில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். அவ்வாறு இருக்கும் போது நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகமே செயல்படுத்தும்; அதை மேற்பார்வைக் குழு கண்காணிக்கும் என்பது அர்த்தமற்றது; அது எக்காலத்திலும் நடக்காதது.  தமிழகத்தின் நூற்றாண்டு காலப் போராட்டத்தை பயனற்றதாக்கி, காவிரிப் பிரச்சினையை தொடங்கிய இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து நிறுத்துவதற்குத் தான் மத்திய அரசின் இம்முடிவு வகை செய்யும்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுத் திட்டம் தமிழக மக்களையும், உழவர்களையும் ஏமாற்றும் வேலை என்பது நன்றாகத் தெரியும் நிலையில், அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்து அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு ஆணையிடுவது தான் உச்சநீதிமன்றத்தின் கடமை ஆகும். ஆனால், மத்திய அரசின் வரைவுத் திட்டம் சரியா, தவறா? என்பதை ஆராய்வது எங்களின் வேலையல்ல; அதை செயல்படுத்த வைப்பது தான் எங்களின் வேலை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு முன் கடந்த 8&ஆம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்த போது, ‘‘ மத்திய அரசு அமைக்கும் அமைப்பு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பாக இருக்க வேண்டும். வறட்சிக் காலங்களில் பாசனத்திற்காக எவ்வளவு தண்ணீர் திறப்பது? குடிநீருக்காக எவ்வளவு தண்ணீர் திறப்பது? என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

அத்தகைய அதிகாரம் இல்லாத அமைப்பை உருவாக்கி காவிரி பிரச்சினையை தொடங்கிய இடத்துக்கே கொண்டு வந்து விடாதீர்கள்’’ என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருந்தார். ஆனால், இப்போது அதை உறுதி செய்யாமல் மத்திய அரசின் முடிவில் தலையிட மாட்டோம் என்பது அதன் கடமையை தட்டிக்கழிக்கும் செயலாகும். இதன்மூலம் தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் அநீதிக்கு உச்சநீதிமன்றமும் துணை போயுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவுத் திட்டம் தமிழக நலன்களுக்கு எதிரானது என்பதால் இந்த திட்டத்தை அடுத்த சில நாட்களில் நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட விசாரணையின் போது தமிழகம் கடுமையாக எதிர்க்க வேண்டும்; மத்திய அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். காவிரி மேற்பார்வை வாரியம் தான் இறுதியான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டால், அதைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும்” –  இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.