புயலால் பாதிக்கப்பட்ட பகுதி வணிகர்களுக்கு ஜிஎஸ்டி கணக்கு அளிக்க அவகாசம்

டில்லி

மிழகம் மற்றும் ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த வணிகர்களுக்கு ஜி எஸ் டி கணக்கு அளிக்க மத்திய அரசு கால அவகாசம் அளித்துள்ளது.

தற்போது கஜா புயலினால் தமிழகத்தில் கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், திருச்சி, கரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் இன்னும் பழைய நிலைக்கு திரும்ப வில்லை. மீட்பு பணிகள் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதே போல் ஆந்திரமாநிலம் தித்லி புயலில் ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி வணிகர்களால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி கணக்குகளை இன்னும் அளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள வணிகர்கள் சென்ற மாதத்துக்கான கணக்கு அளிக்க கடைசி தேதியாக நவம்பர் 20 அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நவம்பர் 21 ஆம் தேதிக்குப் பிறகு அளிக்கப்படும் கணக்குகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 அபராதமும் வட்டியும் செலுத்த வேண்டி இருந்தது.

அதனால் இரு மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் ஜி எஸ் டி கணக்கு அளிக்க கால அவகாசம் கோரினார்கள். அதை ஒட்டி மத்திய அரசு ஆந்திர மாநில வணிகர்களுக்கு நவம்பர் 30 வரையிலும், தமிழக வணிகர்களுக்கு டிசம்பர் 20 வரையிலும் கால அவகாசம் அளித்துள்ளது.