கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசு குழு பரிசீலனை : இல. கணேசன்
ராஜபாளையம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளதாக இல கணேசன் கூறி உள்ளார்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு நாடெங்கும் உள்ள பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, ஜனாதிபதி, ஆளுனர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் நேரில் வந்து தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்பினார். இதற்கு காங்கிரஸ் கட்சி உட்பட பல கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
இன்று ராஜபாளையத்தில் பாஜகவின் மூத்த தலைவரான இல. கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மறைந்த திமுக தலைவ்ர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து பரிசிலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவின் பரிசீலனை முடிவை ஒட்டி மத்திய அரசு முடிவு செய்யும்” என தெரிவித்துள்ளார்.