டில்லி சிஏஏ எதிர்ப்பு போராட்ட வன்முறை பலி 5 ஆனது : சங்கடத்தில் மத்திய அரசு

டில்லி

டில்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஐவர் மரணம் அடைந்துள்ளனர்.

சுமார் 2 மாதங்களாகத் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டில்லியில் உள்ள ஷாகின்பாக் பகுதியில்  போராட்டம் நடந்து வருகிறது.   பெண்கள் நடத்தும் இந்த போராட்டத்தில் அவர்கள் சாலை மறித்துள்ளனர்.  இதனால் பொதுமக்களுக்கு இடையூறு உண்டாவதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற அறிவுறுத்தி இதற்காக ஒரு குழு அமைக்க உத்தரவிட்டது.

போராட்டக்காரர்களுடன் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் அதே இடத்தில் தொடர்கிறது.   இந்த போராட்டம் டில்லியில் உள்ள பல பகுதிகளுக்கும் பரவியது.  இவ்வகையில் நேற்று யமுனா விகார் பகுதியில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  இதில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு ஆகியவற்றை நடத்தி உள்ளனர்.  கலவரத்தில் நடந்த வன்முறையில் தலைமைக் காவலர் ரத்தன் உயிர் இழந்ததையொட்டி டில்லியில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.   நகரில் பல இடங்களில் பாதுகாப்புப்படையினர் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் வெடித்த வன்முறையின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   தற்போது டில்லியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்துள்ள நேரத்தில் வன்முறை நிகழ்ந்துள்ளது மத்திய அரசுக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது.