ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் கட்டாயம் இல்லை : மத்திய அரசு

பெங்களூரு

ர்நாடக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை எனக் கூறி உள்ளது.

கொரோனா பாதிப்பை கண்டறிய உதவும் மொபைல் செயலியான ஆரோக்கிய சேதுவை மத்திய அரசு பரிந்துரை செய்தது.  கடந்த மே மாதம் 25 முதல் உள்ளூர் விமானச் சேவை தொடங்கப்பட்ட போது பயணிகள் அனைவரும் அவசியம் ஆரோக்கிய சேது செயலியைப்  பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.  அத்துடன் இந்த செயலியில் பச்சை நிற அனுமதி உள்ளோர் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது மட்டுமின்றி சிறப்பு ரயில்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் தங்கள் மொபைலில் ஆரோக்கிய சேது செயலியைக் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசால் அறிவிக்கபட்ட்து.  மேலும் இவ்வாறு ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் வரும் பயணிகள் ரயில் நிலையத்தில் அமர்ந்து பதிவிறக்கம் செய்தாக வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆரோக்கிய செயலி பதிவிறக்கம் செய்வதை எதிர்த்து ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.  அந்த வழக்கில் மத்திய அரசு அளித்துள்ள பதிலில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்வது அவரவர் தனிப்பட்ட விருப்பமே தவிரக் கட்டாயப்படுத்தவில்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.