ரபேல் விமான ஊழலை மறைக்கும் மத்திய அரசு : புதுவை முதல்வர்

புதுச்சேரி

த்திய அரசு ரபேல் விமான பேரல் ஊழலை மூடி மறைப்பதாக புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானம் வாங்குவதில் கடும் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.    இதற்கு பாஜக அரசு மறுப்பு தெரிவித்த போதிலும் இது தொடர்பான எந்த விவரத்தையும் வெளியிட மறுத்து வருகிறது.   இந்நிலையில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் நாராயணசாமி, “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமான கொள்முதலில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதை சுட்டிக் காட்டி உள்ளார்.  இது குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரிக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.    இந்த விமானங்களை தலா ரூ.576 கோடி விலைக்கு வாங்க மன்மோகன் சிங் அரசு ஒப்பந்தம் இட இருந்தது.

ஆனால் மோடி பிரதமரான பின்பு இது தலா ரூ.1760 கோடிக்கு தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.    அப்போது 126 விமானங்கள் வாங்க இருந்த நிலையில் தற்போது 32 விமானம் வாங்க மட்டுமே ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்தில் விமானத்தின் விலையை தெரிவிப்பதாக முதலில் கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிறகு அது ராணுவ ரகசியம் எனக் கூறி மறுத்து விட்டார்.

தொழில் நுட்பம் மட்டுமே ராணுவ ரகசியமே தவிர விலை இல்லை.  ஆனால் பிரான்ஸ் அரசு விலையை அறிவித்துள்ளது.    மத்திய அரசு இந்த விமானங்களை பராமரிக்க தனியார் நிறுவனத்துடன் ரூ. 1 லட்சம் கோடிக்கான ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.   பிரதமர் மோடி அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக  செயல்பட்டு வருகிறார்.  மத்திய அரசு மொத்தத்தில் இந்த ரபேல் விமான கொள்முதல் ஊழலை மூடி மறைக்கிறது” என தெரிவித்துள்ளார்.