மக்களை கண்காணிக்கும் அரசு : உச்சநீதிமன்றம் கருத்து
டில்லி
மத்திய அரசு சமூக வலை தளங்களை கண்காணிப்பதன் மூலம் மக்களை கண்காணிக்கிறது என உச்சநீதிமன்றம் கூறி உளது.
மத்திய அரசு சமூக வலை தளங்களில் வெளியாகும் பதிவுகளை கண்காணிக்க ஒரு அமைப்பு ஒன்றை அமைக்க உள்ளது. இந்த அமைப்பின் மூலம் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் கண்காணிக்க இந்த அமைப்புக்கு அரசு அதிகாரம் அளிக்க உள்ளது. இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் சட்ட உறுப்பினர் மகுவா மொய்ரா ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளர்.
அந்த மனுவில் அவர் இதன் மூலம் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிடுவதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது. அந்த அமர்வின் விசாரணையில் மொய்ராவின் வழக்கறிஞராக சிங்க்வி ஆஜரானார்.
இது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ள டெண்டர் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவடைகிறது. அதை ஒட்டி அவசரமாக விசாரிக்க வேண்டும் என மொய்ரா சார்பில் சிங்க்வி தெரிவித்தார். அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
அத்துடன், “மத்திய அரசின் சமூக வலை தளப் பதிவுகளை கண்காணிக்கும் அமைப்பு ஒவ்வொரு தனி நபரின் பதிவையும் கண்காணிக்கும் அமைப்பாகும். அதாவது இந்த அமைப்பின் மூலம் அரசு மக்களை கண்காணிப்பதாகும். இந்த அமைப்பு குறித்த முழு விவரங்களையும் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறை உச்சநீதிமன்றத்துக்கு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் அதாவது இந்த டெண்டர் முடியும் ஆகஸ்ட் 30க்கு மூன்று வாரங்கள் முன்பு அளிக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.