மத்திய அரசு விவசாயிகளைக் கண்டு கொள்ளவில்லை : சோனியா காந்தி

டில்லி

த்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில் கவனம் கொள்ளாமல் விவசாயிகளைப் புறக்கணிப்பதாக காங்கிர்ஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் தொடர்ந்து 39 நாட்களாக போராடி வருகின்றனர்.   மத்திய அரசு இது குறித்து 6 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.   வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகளும் திரும்பப் பெற முடியாது என அரசும் பிடிவாதமாக உள்ளனர்.  இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் சோனியா காந்தி, “டில்லியின் எல்லைகளில் கடந்த 39 நாட்களாக நமது விவசாயிகள், கடும் குளிரிலும், மழையிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  விவசாயிகளின் அவலநிலையைக் கண்டு, நாட்டு மக்களுடன் இணைந்து நானும் கவலை அடைகிறேன். இந்த போராட்டம் குறித்த மத்திய அரசின் அணுகுமுறையால் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு சில விவசாயிகள் தற்கொலை முயற்சி செய்துள்ளனனர்.

விவசாயிகளின் தற்கொலை முடிவைப் பார்த்து மோடி அரசுக்கும், எந்த அமைச்சருக்கும் ஆறுதல் தெரிவிக்க தோன்றவில்லை. இப்படிப்பட்ட மத்திய அரசின் நிலைப்பாடு ஆணவத்திற்கு ஒப்பானது. நான் இறந்த அனைத்து விவசாய சகோதரர்களுக்கு என் இரங்கல்களையும், அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு மன வலிமையையும் அளிக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன்.

விவசாயிகளையும், மக்களையும் கண்டுகொள்ளாத சுதந்திரத்திற்குப் பின் வந்த முதல் அகங்கார அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. லாபத்தை, தொழிலதிபர்களுக்குப் பெற்றுத்தர வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் விவசாயிகளைச் சோர்வடையச் செய்து அவர்களை அகற்றுங்கள் என்ற கொள்கையை அரசு கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது.

அதே வேளையில் விவசாயிகள் உங்கள் முன் பணிய மாட்டார்கள். மத்திய அரசு அகம்பாவத்தைவிட்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், நலன்களைக் காப்பதாகும்”.என தெரிவித்துள்ளார்.