அனைத்து குடிமக்களுக்கும் இ பாஸ்போர்ட் : மத்திய அரசின் புது திட்டம்

டில்லி

குடிமக்கள் அனைவருக்கும் இ பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளுக்குச் செல்ல அவசியத் தேவையான பாஸ்போர்ட் தற்போது புத்தக வடிவில் வழங்கப்படுகிறது.  இதன்மூலம் பலரும் ஏமாற்று வேலைகள் செய்து வெளிநாட்டு பயணங்களை மறைப்பது ஆள் மாறாட்டம் செய்வது எனப் பல தவறுகள் செய்து வருகின்றனர்.  இதைத் தடுக்க மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கையாக குடிமக்கள் அனைவருக்கும் சிப் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இ பாஸ்போர்ட் சர்வதேச விமான போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட உள்ளன.  இது சோதனை முயற்சியாக சுமார் 20000 அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த சோதனை வெற்றியடைவதைப் பொறுத்து குடிமக்கள் அனைவருக்கும் இ பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னை மற்றும் டில்லியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் பிரத்தியேக கிளை அலுவலகங்கள் அமைத்து அதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 10 ஆயிரம் முதல் 20  ஆயிரம் இ பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட உள்ளன.  இந்த பணிக்காகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யும் பணியைத் தேசிய தகவல் மையம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்த உள்ளன.

வரும் ஆண்டு முதல் நாட்டில் அமைந்துள்ள 36 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இ பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளன.   இ பாஸ்போர்ட் பெறுவதில் கால தாமதம் இருக்காது என தெரிவிக்கபட்டுள்ள்து.  தற்போது மணிக்கு 10000 இ பாஸ்போர்ட் மற்றும் நாள் ஒன்றுக்கு 50000 இ பாஸ்போர்டுகள்  வழங்கப்படும் என  நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  விரைவில் இது மணிக்கு 20000 மற்றும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என வழங்கப்பட  உள்ளது.