டில்லி:

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் 2006ம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ராஜ்யசபாவில் எம்பி சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் சவுத்ரி இன்று  எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். அதன் விபரம்…

‘‘சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை கிடைக்கப்பெற்று, அது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தலைமை நீதிபதியிடம் இருந்து 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி கடிதம் வரப்பெற்றது. இதில் 11.10.2012ம் தேதி அனைத்து நீதிபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் இந்த கோரிக்கை ஏற்க முடியாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்று அந்த பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.