வெளிநாட்டு வெள்ள நிவாரண உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் : உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்

வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் வெள்ள நிவாரண நிதியை ஏற்க வேண்டும் என பிரதமருக்கு முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதி உள்ளார்.

கேரள வெள்ளத்தினல் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   லட்சக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர்.  வெள்ளத்தை ஒட்டி நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.   மாநிலத்தில் இதுவரை 357 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.   அத்துடன் மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கும் என பிரதமர் அறிவித்தார்.

இது தவிர பல்வேறு வகை உதவிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.  வெள்ளத்தல் பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலைகளை உடனடியாக பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.   வீடிழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கேரளாவின் முன்னால் முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.   அதில், “கேரள வெள்ள பாதிப்புகளை நேரில் காண வந்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்   கேரளாவில் ஏற்பட்டுள்ள கடுமையான இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிதி உதவி போதாது.   இவ்வாறு தெரிவிப்பதற்கு என்னை மன்னிக்கவும்.

இத்தகைய ஒரு  பேரிடருக்கு இவ்வளவு குறைந்த நிதி அளிப்பது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரபு அமீரகம் வழங்க இருந்த ரூ. 700 கோடியை மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்னும் தகவல் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.    இதுவும் கேரள மக்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.    அமீரக உதவியை ஏற்பதில்  ஏதேனும் சட்ட சிக்கல்கள் இருந்தால் அதை உடனடியாக மத்திய அரசு சரி செய்ய வேண்டும்.

வெள்ளத்தால் துயருறும் கேரள மக்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகலை செய்யும் என நான் நம்புகிறேன்.   இந்த வெள்ள சேததை நீங்கள் இயற்கையால் ஏற்பட்ட பேரழிவு என அறிவித்துள்ளீர்கள்.   ஆனால் அதை மாற்றி தேசிய பேரிடர் என அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.   அதன் மூலம் கேரள மக்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்கும்” என உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.