சென்னை

கொரோனா தடுப்பூசி கொள்கையை அனைவருக்கும் தடுப்பூசி என மாற்ற மத்திய அரசை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நாடெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.   கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை எனக் கூறப்படும் இந்த கால கட்டத்தில் முன்பு இருந்ததை விட தற்போது பாதிப்பு அதிகமாக உள்ளது.  இதையொட்டி மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  கொரோனா தடுப்பூசி போடும்  பணியும் தீவிரமாகி உள்ளது.

ஏற்கனவே கொரோனா முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா ஊசி போடப்பட்டது.  அதன் பிறகு மார்ச் 1 முதல் 60 வயதை தாண்டியோருக்கும் 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், “தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.  எனவே மத்திய அரசு 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் கொள்கையை அனைவருக்கும் தடுப்பூசி என மாற்ற வேண்டும்.    இனியாவது தமிழக அரசு அதிகாரிகள் விழிப்புணர்வுடன் அனைவருக்கு தடுப்பூசி போட முனைய வேண்டும்.

அது மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும்.   தமிழக அரசு அதிகாரிகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.   மக்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.