டில்லி

காவிரி டெல்டா மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது குறித்து இன்னும் 4 நாட்களில் மத்திய அரசு முடிவு எடுக்கும் எனத் தமிழக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காவிரி டெல்டா மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார். அத்துடன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குச் சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை என்னும் விதியை ரத்து செய்யவும் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என  மத்திய அரசுக்குக் கோரிக்கை விடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இடம் தமிழக அமைச்சர் ஜெயகுமார் வழங்கி உள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் ஜெயகுமார், ”முதல்வரின் வேளான் மண்டலம் குறித்த கோரிக்கை கடிதத்தை மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளோம்.   இந்த அறிவிப்பைக் காவிரி டெல்டா மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பையொட்டி முதல்வர் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதிகளை முதல்வர் அறிவித்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.     இந்த அறிவிப்பு குறித்த விளக்கத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ்  ஜவடேகரிடம் தெரிவித்தேன்.   இன்னும் 4 நாட்களில் இது குறித்த நல்ல முடிவை மத்திய அர்சு எடுக்க உள்ளது.

இந்த சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு விஷயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  தமிழகத்தில் எந்த நல்லது நடந்தாலும் மு க ஸ்டாலினுக்குப் பிடிக்காது” எனத் தெரிவித்தார்.