மின்சார கார்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் அமைப்பு : மத்திய அரசு நடவடிக்கை

டில்லி

மின்சார கார்களை சார்ஜ் செய்யும் வசதிகளை சாலைகளில் அமைப்பதற்கு மத்திய எரிசக்தி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

உலகெங்கும் மாசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதில் இந்தியாவில் டில்லி நகரம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவின் பெரு நகரங்கள் உள்ளன. இவ்வாறு மாசு உண்டாவதற்கு முக்கிய காரணங்களில் வாகனங்களும் ஒன்றாகும். பெட்ரோல் மற்றும் டீசல்களில் ஓடும் வாகனங்களில் இருந்து வரும் புகையால் அனைத்து நகரங்களும் மாசடைந்து வருகின்றன.

பல உலக நாடுகளில் தற்போது மின்சார வாகனங்களை அதிக அளவில் உள்ளன. இந்தியாவில் மிக மிக குறைவான அளவில் இந்த வாகனங்கள் உள்ளன. இதை அதிகரிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசின் எரிசக்தி துறை ஈடுபட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதை ஒட்டி தற்போது இத்தகைய வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது.

சாதாரண வாகனங்களுக்கு எரிபொருளுக்காக நாடெங்கும் சாலைகளில் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் உள்ளன. அதைப் போல இவ்வகை வாகனங்க்ளுக்கு சார்ஜிங் வசதி தேவை.   இதனால் சாலைகளில் சார்ஜிங் வசதி ஏற்படுத்துவது குறித்த நடவடிக்கைகளை மத்திய எரிசக்தி துறை செய்து வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடந்தது.

அந்த கூட்டத்தில் சாலை வரைபடத்தை வைத்து சார்ஜிங் வசதி எந்த சாலைகளில் செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சில இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த சாலைகளில் சார்ஜிங் வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த வசதி மற்ற இடங்களுக்கு விரிவு படுத்த முடிவு எடுக்கபட்டுள்ளது.