டில்லி

சீக்கியர்களின் ஆலயமான குருத்வாராவில் வழங்கப்படும் அன்னதானத்துக்காக வாங்கிய பொருட்களுக்கு செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி ரூ.57 லட்சத்தை மத்திய அரசு திரும்ப அளிக்கிறது.

சீக்கியர்களின் ஆலயங்களான குருத்வாராவில் பக்தர்களுக்கு லங்கர் என அழைக்கப்படும் சமுதாய சமையல் கூடம் மூலமாக அன்னதானம் வழங்கபடுகிறது.   இது அமிர்த சரசில் உள்ள பொற்கோயில் உள்ளிட்ட அனைத்து குருத்வாராக்களிலும் வழங்கபட்டு வருகிறது.    இந்த அன்னதானத்துக்காக வாங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உண்டு.

இது குறித்து பதிண்டா மக்களவை தொகுதி உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் சென்ற பாஜக அரசுக்கு ஜி எஸ் டி யில் இருந்து லங்கருக்கு வாங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.   ஆனால் அந்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.   ஹர்சிம்ரத் இதுவரை மூன்று முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

குருத்வாராக்கள் இதுவரை உணவுப் பொருட்கள் வாங்கிய விதத்தில் குருத்வாராக்கள் ரூ. 57 லட்சம் செலுத்தி இருந்தன.   அந்த ரூ. 57 லட்சத்தை திருப்பி அளிக்க தற்போது இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   மேலும் இனி குருத்வாராக்களுக்கு சேவா போஜ் யோஜனா என்னும் திட்டத்தின் கீழ் ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட உள்ளது.

நேற்று ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது டிவிட்டரில், “சீக்கிய சமுதாயத்துக்கு அளித்த இன்னொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.   சிரோமணி குருத்வாரா பிரபஞ்ச கமிட்டி செலுத்தியுள்ள ரூ. 57 லட்சத்தை அரசு திரும்ப அளிக்கிறது.   இது முதல் தவணையாகும்.

விரைவில் குருத்வாராக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி ஒவ்வொரு காலாண்டுக்கான ஜி எஸ் டி திரும்ப வழங்கப்படும்.  சீக்கிய சமுதாயத்துக்கு பிரதம்ர் மோடி அளித்த மரியாதைக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிந்துள்ளார்.