டில்லி

த்திய அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு எதிரிகள் சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ள 9400 சொத்துக்களை விற்பனை   செய்ய உள்ளது.

 

 

 

 

நாட்டை விட்டு ஓடிச் சென்று பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களின் கட்டிடம், நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களும் எதிரிகள் சொத்து என வகைப்படுத்தப் பட்டுள்ளன.  இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட எதிரிகள் சொத்துக்களை மத்திய அரசு கைப்பற்றி விற்பனை செய்து அந்த தொகையை அரசு நிதியில் சேர்ப்பது வழக்கமாகும்.

அவ்வகையில் மத்திய அரசு தற்போது 9280 பாகிஸ்தானியர் சொத்துக்களையும் 126 சீனர்களின் சொத்துக்களையும் எதிரிகள் சொத்தாக வகைப்படுத்தி உள்ளது.  இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1.1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானியர்களின் சொத்துக்களில் 4991 சொத்துக்கள் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் 2735 சொத்துக்கள் மேற்கு வ்ங்க மாநிலத்திலும்,487 சொத்துக்கள் டில்லியிலும் உள்ளன.

சீனர்கள் சொத்தில் 57 மேகாலயாவிலும், 29 மேற்கு வங்கத்திலும், 7 அசாம் மாநிலத்திலும் உள்ளன.

இவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.  இந்தக்குழுவில் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்ட அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். தவிர மத்திய உள்துறைச் செயலர் தலைமையில் உள்ள அதிகாரிகள் குழு அமைச்சர்களுக்கு உதவ அமைக்கப்பட்டுள்ளது.