டில்லி

மிழகத்தில் திரையரங்குகளில் 100% அனுமதி அளித்ததற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதையொட்டி தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன.  அதன் பிறகு சிறிது சிறிதாக ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.   இந்த தளர்வுகளை அந்தந்த மாநிலத்தில் உள்ள கொரோனா பரவல் நிலையைப் பொறுத்து மாநில அரசுகள் அமல்படுத்தலாம் என மத்திய அரசு கூறி இருந்தது.

அந்த அடிப்படையில் தமிழகத்தில் திரையரங்குகளில் 50% பேருக்கு மட்டும் அனுமதி என்னும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.   ஆயினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு வர அஞ்சினர்.  தற்போது விஜய், சிம்பு ஆகிய நடிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக அரசு 100% அனுமதி அளித்துள்ளது.  இதற்கு மருத்துவர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெயர் தெரிவிக்க விரும்பாத தமிழக அரசு அதிகாரி ஒருவர் தற்போது கொரோனாவை தடுப்பதில் முன்னிலையில் உள்ள அமைச்சர்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.  மேலும் மருத்துவர்கள் பலர் இந்த நடவடிக்கையை எதிர்த்து கோரிக்கை எழுப்பிய போதும் வருவாய்த்துறை அதைக் கண்டுகொள்ளாமல் இந்த உத்தரவை நிறைவேற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   மேலும் இது குறித்து முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மக்கள் யாரிடமும் கருத்துக் கேட்கவில்லை எனவும் அவர் கூறி உள்ளார்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரவை அதிகாரி ஒருவர், “இந்த தொற்று பரவல் நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. கேரள அரசு சமீபத்தில் இந்த நெறிமுறைகளை மீறிய போது அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதைப் போல் தமிழக அரசின் இந்த உத்தரவால் மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது.  விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.