புதுடெல்லி: வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு ரூ.30000 கோடி மதிப்பில் சிறப்புப் பணப்புழக்க சலுகையை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ரூ.20 லட்சம் கோடி பொருளாதார பேக்கேஜ் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, சம்பந்தப்பட்ட தொழில்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இத்திட்டத்தின் கீழ், மூன்று மாத காலக்கட்டத்திற்கு மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. ஆனால், தொழில்துறையின் சார்பில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு பணப்புழக்க ஆதரவு எதிர்பார்க்கப்பட்டது.
“இந்த அறிவிப்பு எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மூன்று மாத திருப்பிச் செலுத்தல் காலக்கட்டம் கொண்ட இத்திட்டம் ஒரு non-starter. இந்தக் குறுகியகால அவகாசத்தில், எந்த வங்கியல்லாத நிதி நிறுவனமும் பணத்தை திருப்பி செலுத்த இயலாது” என்றுள்ளார் அந்த அமைப்பின் பிரதிநிதித்துவ உறுப்பான எஃப்ஐடிசி உப தலைவர் ராமன் அகர்வால்.
“அரசு எங்களிடம் கலந்தாலோசனை செய்திருந்தால், இந்த அறிவிப்பு வந்திருக்காது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் ஒப்புதலையடுத்து, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கு ரூ.30000 கோடி மதிப்பிலான சிறப்புப் பணப்புழக்க வசதியை அறிவித்தது நிதியமைச்சகம்.
ஆனால், அரசு அறிவித்துள்ள 3 மாதங்கள் என்ற குறுகிய தவணை காலம் என்பதுதான் தற்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்தக் குறுகியகால தவணைக்கு எங்களுக்கு அரசுத் திட்டம் தேவையில்லை; மாறாக, வேறு எங்கேனும்கூட வாங்கிக்கொள்ள முடியும் என்று கவலை தெரிவித்துள்ளன தொடர்புடைய வட்டாரங்கள்.