கொரோனா வைரஸைக் கண்டு மிரள வேண்டியதில்லை என்கிறார் சுகாதார அமைச்சர்!

புதுடெல்லி: பெரிதும் அஞ்சும் வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் அவ்வளவு உக்கிரமானதாக இல்லை என்றுள்ளார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்.

இந்தியாவில் அதிக குணமாகும் விகிதத்தை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் குறித்து அஞ்ச வேண்டிய அவசியமில்ல‍ை. கடந்த சில வாரங்களாகவே, மக்களுக்கு இதை சொல்லி வருகிறது அரசு. நீங்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, உங்களின் கைகளை அடிக்கடி கழுவி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளோம். எனவே, அதிக பரவல் நிகழும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தொற்றுக்கு ஆளானவர்கள் மிரள வ‍ேண்டிய தேவையில்லை. இந்த வைரஸின் தாக்கம் குறித்து நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

135 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், இதுவரை 3500 மக்கள்தான் இறந்துள்ளனர். எனவே, நம் நாட்டில் அந்த வைரஸ் அந்தளவிற்கு பயங்கரமானதல்ல” என்றுள்ளார் அமைச்சர்.