டில்லி:

மோடியுடன் வெளிநாடுகளுக்கு சென்ற தனியார் தொழில் நிறுவன பிரதிநிதிகள் பட்டியலை அளிக்க பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் போது தொழிதிலபர்கள், தனியார் நிறுவன சிஇஓ.க்கள், தனியார் நிறுவன அதிகாரிகள் என பலர் மோடியுடன் செல்கின்றனர்.

இவ்வாறு பிரதமர் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களின் போது உடன் செல்லும் தனியார் நபர்களின் விபரங்களை தெரிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நீரஜ் சர்மா என்பவர் மனு அளித்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களால் இந்த தகவல்கள் அளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மறுத்து வந்தது. பல முறை மனு அளித்தும் பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து மத்திய தகவல் ஆணையரிடம் நீரஜ் சர்மா மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் விசாரித்தார்.

‘‘2014-17ம் ஆண்டு மக்கள் பணத்தில் தான் பிரதமர் உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதனால் பாதுகாப்பு விஷயத்துடன் தொடர்பு இல்லாத உடன் சென்ற தனியார் நிறுவன பிரதிநிதிகள் பெயர்/பட்டியலை அளிக்க வேண்டும்.

மேலும், இந்த பட்டியலுக்கு தனியார் நிறுவன பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் முறை, இது தொடர்பான பிரதமர், அதிகாரிகள், இமெயில், கடிதம், அறிவுரைகள் குறித்த விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.