அமித்ஷா பாதுகாப்பு செலவை வெளியிட தகவல் ஆணையம் மறுப்பு

டில்லி:

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கான செலவு குறித்த விபரங்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் மறுத்துள்ளது.

விஐபிக்களுக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபக் ஜுனேஜா என்பவர் பாஜக தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்புக்காக மத்திய அரசு செலவு செய்துள்ள தகவல்கள் கேட்டு மத்திய தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார்.

அதில், அமித்ஷாவுக்கு மத்திய அரசின் செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், யார்? யாருக்கெல்லாம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்ற பட்டியலையும் கேட்டிருந்தார். இதற்கு மத்திய தகவல் ஆணையம் அளித்த பதிலில், ‘‘பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் பாதுகாப்பு செலவினங்கள் குறித்த தகவலை பாதுகாப்பு கருதி தெரிவிக்க முடியாது’’ என தெரிவித்துள்ளது.