பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிலாளர் நல அமைச்சகம்

டில்லி

தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்யக் கோரும் உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் அரசுகளுக்கு மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது அனைத்து தொழிலகம் மற்றும் வர்த்தகம் நின்று போனதால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.  அதைச் சரிக்கட்ட பாஜக ஆளும் குஜராத், உத்தரப்பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்கள் தொழிலாளர் நலச் சட்டத்தில் வேலை நேரத்தை கூட்டுவது போன்ற திருத்தங்களை அறிவித்தது.  இந்த திருத்தங்களை மசோதாவாக்கி மத்திய தொழிலாளர் நலத்துரை அமைச்சகம் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்த சட்டத் திருத்தங்களுக்கு மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கடும் எதிர்ப்புதெரிவித்டுளது.   அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “இது சரியான நடவடிக்கை இல்லை.  ஒரு மாநிலத்தில் தொழிலாளர் நல சட்டத்தை அடியோடு நீக்கும் சட்ட மசோதாவை எப்படிப் பிறப்பிக்க முடியும்?  இந்த சட்ட நீக்கத்தால் யாருக்கு நன்மை கிடைக்கும்.?   இது குறித்து அமைச்சகம் பதில் தயார் செய்து வருகிறது,  விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் மாநில அரசுகள் தற்போதுள்ள பொருளாதார சரிவில் இதுபோன்ற தொழிலாளர் சட்டத்  திருத்தம் இன்னும் 3 வருடங்களுக்கு அவசியம் என கூறியுள்ளது.   மேலும் இந்த புதிய சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணிக்க உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளது.    ஆனால் அரசின் இந்த நடவடிக்கைகளுக்குத் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி அஸிம் பிரேம்ஜி, ராஜிவ் பஜாஜ் போன்ற தொழிலதிபர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா  குறித்து அரசியலமைப்பு சட்ட நிபுணர் கவுதம் பாட்டியா, “இந்த புதிய சட்ட மசோதா குறித்து அமைச்சரவையின் ஆலோசனையைக் குடியரசுத் தலைவர் கேட்பார்.  இது குறித்து மத்திய அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும்.   இந்த முடிவைக் குடியரசுத் தலைவருக்கு  அனுப்பி வைக்கப்படும்.   அவர் இந்த மசோதாவை ஒப்புக் கொள்ளவில்லை எனில் அது மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்பப்படும்.  இந்த மசோதா சட்டப்படி செல்லாது என்பதால் இதை அமைச்சரவை ஏற்காது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல் சட்டத்தை மாநில அரசின் திருத்த மசோதா மூலம் மாற்றி விட முடியாது எனத் தொழிலாளர் நலச் சட்ட வழக்கறிஞர் ராமப்ரியா கோபால கிருஷ்ணன தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது போல ஏற்கனவே ஒரு சில மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்த மசோதாக்கள் நிராகரிக்கபட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.