டில்லி

நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்

உலகெங்கும் சுற்றுச் சூழல் பெரும்  பங்கு வகிக்கிறது.  குறிப்பாக இந்தியாவில் நாடெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்பில் பழைய வாகனங்கள் பெரும் பங்கு வகிக்கிறது.  எனவே இதைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.   அந்த அடிப்படையில் மின்சாரம், மற்றும் மாற்று எரிவாயுக்களில் இயங்கும் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கும் திட்ட முன் வடிவுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.  இந்த திட்ட முன்வடிவு மாநில அரசுகளின் ஆலோசனைக்கு அனுப்ப உள்ளது.  இந்த முன்வடிவில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இங்குக் காண்போம்

”எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில் சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் பெறலாம்.

தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவுச் சான்றிதழை புதுப்பிக்கும்போது பசுமை வரி விதிக்கப்படும்.

பொது போக்குவரத்து வாகனங்களான நகரப் பேருந்துகள் போன்றவற்றிற்கு குறைந்த அளவில் பசுமை வரி விதிக்கப்படும்.மின்சாரம், மாற்று எரிவாயுக்களில் இயங்கும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

பசுமை வரியின் மூலம் பெறப்படும் வருவாய், மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும்.”

என உள்ளன.