மண்டல பூஜை: அய்யப்பனை தரிசிக்க சபரிமலை புறப்பட்டார் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்:

கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் பரபரப்பாக நடைபெற்றும் நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அய்யப்பனை தரிசிக்க சபரிமலை புறப்பட்டார்.

இன்று அவர் கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து சபரிமலை விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது.

உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தீர்ப்பை மேற்கோள் காட்டி கோவிலுக்கு செல்ல முயலும் பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

சபரிமலை விவகாரம் கேரளாவில் தகதகவென எரிந்துகொண்டுள்ள நிலையில், மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை தற்போது திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி  நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து சபரிமலை புறப்பட்டார். ஏற்கனவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதட்டமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க செல்வது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கேரள அரசு சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கேரள அரசு தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். சபரிமலையில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை நிர்ணயிக்க முடியாது.

ஏற்கனவே விரதமிருப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை ஐயப்பனே விதித்துள்ளார். நான் சபரிமலைக்கு ஒரு பக்தனாக மட்டுமே செல்கிறேன்” என்றார்.  இன்று காலை சபரிமலை சன்னிதானம் செல்லும் அமைச்சர் அங்கு இன்று முற்பகல் அய்யப்பனை தரிசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

படம் உதவி: Jackson Herby