ராம்விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை

டில்லி

மூத்த அரசியல்வாதியும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து வரும் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அரசில் நுகர்வோர் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.  இவருடைய கட்சியான லோக் ஜன்சக்தி பீகாரில் சக்தி வாய்ந்த அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.  இவருக்கு தற்போது 74 வயதாகிறது.

உடல்நிலை கோளாறு காரணமாகக் கடந்த சில வாரங்களாக பஸ்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   இவருக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  இந்த செய்தியை ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் லோக் ஜன்சக்தி தலைவருமான சிராக் பஸ்வான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சிராக் பஸ்வான் தனது டிவிட்டரில், “எனது தந்தை ராம்விலாஸ் பஸ்வானின் உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இதனால் கட்சியின் கூட்டத்தை ரத்து செய்ய நேர்ந்தது.  அவசியம் என்றால் மீண்டும் அடுத்த வாரம் அறுவைச் சிகிச்சை நடக்கலாம்.  தற்போது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆதரவாக உள்ள அனைவருக்கும் நன்றி” எனப் பதிந்துள்ளார்.