புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பான மோசடியில் ஈடுபடும் மருத்துவமனைகளின் பெயர்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜ்னாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரித்துள்ளார்.

இதுவரை 1200 மோசடிகள் கண்டறியப்பட்டு மொத்தம் 338 மருத்துவமனைகளின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த அரசு ஊழலை எந்தவகையிலும் பொறுத்துக்கொள்ளாது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, “மருத்துவமனைகள் மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜ்னா திட்டத்திலிருந்து அவற்றின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படுவதோடு, பெயரும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜ்னாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்றப்பட்டு சிறுமைப்படுத்தப்படும்” என்றார்.

குறிப்பிட்ட மருத்துவமனைகளின் பெயர்களை வெளிப்படையாக வெளியிட்டு சிறுமைப்படுத்துதல் என்ற முடிவானது, ஐஆர்டிஏஐ உடன் இணைந்து எடுக்கப்பட்டதாகும் எனக்கூறிய தேசிய மருத்துவ ஆணையத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் இந்து பூஷண், மருத்துவமனைகள் மோசடிகளில் ஈடுபடாமல் தடுக்கவே இப்படியான முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.