டில்லி,

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு விருந்தை மத்திய அமைச்சர்கள் புறக்கணித்தனர்.

டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக அனைத்து கட்சி தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி அன்சாரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் குலாப் நபி ஆசாத், கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கு கொண்டனர்.

இந்த இப்தார் நோன்பு விருந்தில் மத்திய அமைச்சர்கள் ஒருவர்கூட பங்குபெறவில்லை. இது இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து ராஜ்யசபா எம்.பி. ஜாவேத் அலி கான் கூறும்போது,  “ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கிய இப்தார் ஒன்றில் ஒரு மந்திரி எதனையும் நான் காணவில்லை. கடந்த காலத்தில், நான் ராஷ்டிரபதி பவனில் மூன்று இஃப்தாரில் கலந்து கொண்டேன். அப்போதெல்லாம் மத்திய அமைச்சர்கள்  ராஜ்நாத் சிங், முக்தார் அப்பாஸ் நக்வி, மகேஷ் ஷர்மா மற்றும் விஜய் கோயல் போன்ற அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளதை பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த ஆண்டு விருந்தில் யாரும் பங்குபெறவில்லை என்று கூறினார்.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஜனாதிபதியின் இப்தார்  நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் நக்வி, பிரதமர் இன்று வெளிநாடு செல்ல இருந்ததால், அதுகுறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை  கூட்டப்பட்டது. அது முடிய இரவு 8 மணிக்கு மேல் ஆனதால்,  மத்திய அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ள இயலவில்லை என்று கூறினார்.

ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியி பதவி அடுத்த மாதம் முடிவடைவதால், ராஷ்டிரபதி பவனில் அவரது இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இதுவே கடைசி.

இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் முன்னாள் சி.இ.சி. எஸ். குரேஷி, முன்னாள் ராஜ்யசபை எம்.பி. மொஷ்சினா கிட்வாய், இந்தியா இஸ்லாமிய கலாசார மையத் தலைவர் சிராஜூதின் குரேஷி மற்றும் நாடக நடிகர் அமீர் ரஸா ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மத்திய அமைச்சர்கள் ஜனாதிபதியின் இப்தார் நோன்பு நிகழ்ச்சியை புறக்கணித்தது குறித்து கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது,

“ஜனாதிபதி அழைப்பு விடுத்த இப்தார் விருந்தில்,  ஒரு மந்திகூட கலந்துகொள்ளவில்லை. மேலும் அரசு சார்பாக  ஒரு அரசாங்க பிரதிநிதிகூட கலந்துகொள்ளவில்லை என்றார்.

மேலும், ஜனாதிபதி வழங்கிய இப்தார் நிகழ்ச்சியிய்ல  ஒரு பி.ஜே.பி தலைவர்கூட கலந்துகொள்ளவில்லை. இத்தனை ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இதுபோல  நான் ஒருபோதும் பார்த்தது இல்லை என்று கூறினார்.