புதுடெல்லி: இந்திய வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், நாட்டின் வேலைவாய்ப்பின்மை சிக்கலுக்கு காரணகர்த்தாக்களாக வேலைதேடுவோர்களையே குற்றம் சாட்டும் வகையில் பேசியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் பெரேய்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பேசுகையில், “நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறையெல்லாம் கிடையாது. ஆனால், வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் பல நிறுவனங்கள், சரியான தகுதி மற்றும் திறமையுடன் தங்களுக்கான ஆட்கள் கிடைப்பதில்லை என்கின்றன” என்று கூறினார்.

வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலைவாய்ப்பு சூழலை கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். “திரு.அமைச்சர் அவர்களே, 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருக்கும் உங்களது அரசின் கொள்கைகளால் வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன. எனவே, வட இந்தியர்களின் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்காதீர்கள்.

தங்களுக்கு இந்த அரசின் மூலமாக ஏதேனும் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்” என்றுள்ளார் பிரியங்கா.

நாட்டின் வேலைவாய்ப்பு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ள நிலையிலும், ஜிடிபி வளர்ச்சி பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையிலும் அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.