கஜா நிவாரணமாக மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி ஒதுக்கீடு

டில்லி:

ஜா புயல் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துஉள்ளது.

கடந்த நவம்பர் 15ம் தேதி தமிழகத்தில் வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்துச் சென்றது. இதன் காரணமாக 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. கஜா புயலின் கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 தென்னை மற்றும் வாழை  மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசோ வெறும் 353 கோடி மட்டுமே ஒதுக்கி இருந்தது.

மத்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்திய நிலையில்,  மத்திய அரசு குழுவினர் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து சென்றனர். ஆனால், எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு  வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் குழுவினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையை தொடர்ந்து நிவாரண நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,  தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை சந்தித்து டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக சேத விவரங்களையும், அதற்கான இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் மத்திய அமைச்சரிடம் மனு அளித்தார்.

இதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் ராதா மோகன்சிங் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிக்காக மத்திய வேளாண்மைத் துறை சார்பில் ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

இதில் தென்னை மரங்களுக்கு ரூ.93 கோடியும், தோட்ட பயிர் சாகுபடிக்கு ரூ.80 கோடியும் ஒதுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may have missed