வெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை

சென்னை

மிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு வர உள்ளது

மாதிரி புகைப்படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கடந்த மாதம் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிப்பு அதிக அளவில் இருந்தது.   எனவே ஜூன் 17 முதல் ஜூன் 30 வரை இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.   கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது.  ஜூன் மாதம் சுமார் 2000 பேர் வரை  பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  கடந்த 3 நாட்களாக 1500 க்கு குறைவாகவே பாதிப்பு உள்ளது.   நேற்று தமிழகத்தில் 3616 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதில் சென்னையில் 1203 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதில் மதுரை மாவட்டத்தில் அதிக அளவு பாதிப்பு உள்ளதால் இங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  அத்துடன் விருதுநகர்,  தேனி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 2413 பேர் நேற்று பாதிக்கபட்டுள்ளனர்.

இதையொட்டி மத்திய அரசு இன்று தமிழகத்துக்கு மருத்துவ நிபுணர்களின் சிறப்புக் குழுவை ஆய்வு செய்ய அனுப்புகிறது.  இந்த குழு மத்திய கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய இணை செயலாளர் ராஜேந்திர ரத்னோ, இணை செயலாளர் சுபோத் யாடவா, டாக்டர் சுவரூப் சாகு, டாக்டர் சதீஷ் என 5 பேர் கொண்ட  குழு ஆகும்.

இவர்கள் இன்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகின்றனர்.  சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்கின்றனர்.  நாளை இக்குழுவினர் தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமை செயலாள்ர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து அலோசனை நடத்த உள்ளனர்.

இந்த குழு தனது 3 நாள் பயணத்தில் கொரோனா நோயாளிகள் அதிகம் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமை முகாம்களை பார்வையிட உள்ளனர்.  அத்துடன் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் செல்ல உள்ளனர்   வரும் 10 ஆம் தேதி இந்த குழுவினர் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானத்தில் டில்லி செல்ல உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி