கஜா புயல் சேதம்: மத்திய குழு கடைசி நாளாக இன்று நாகையில் ஆய்வு

நாகை:

ஜா புயல் காரணமாக நாகை, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசு அனுப்பி உள்ள டேனியல் ரிச்சர்டு தலைமை யிலான 7 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை முதல் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 3 நாட்கள் ஆய்வு நடத்தும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக பல இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தனர்.

இன்று கடைசிநாளாக  மத்திய குழுவினர் நாகை மாவட்டத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நேற்று ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூரில் புயலால் சேதமடைந்த வீடுகளையும் புயலால் சாய்ந்த தென்னைகளையும் மத்தியக் குழுவினர்   பார்வையிட்டனர். சாலை, குடிநீர், மின்சாரம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம் குறைகளைத் தெரிவித்த பொதுமக்கள், புயலில் சேதமடைந்த சொத்துக்களுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

புயல் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுவின் தலைவர் ரிச்சர்டு,  மக்கள் இந்த பகுதி மக்கள் தைரியமானவர்கள் என்றும்,  தென்னைகள் முற்றிலும் சாய்ந்ததால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதாக கூறினர்.

மேலும், இது குறித்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பின்னர்  பிற்பகலில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஊராட்சியில் உள்ள ஜாம்புவான்ஓடை மற்றும் தொண்டிக்காடு உள்பட பல கிராமங்களை பார்வையிட்டனர். அங்கு மக்களின் ஓலை மற்றும் கொட்டகை வீடுகள், ஓட்டு வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டதையும் கண்டறிந்தனர். அப்போது பல பொதுமக்கள், மத்திய குழுவினர்களின் காலில் விழுந்து நிவாரண உதவிகளை வழங்குமாறு கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் இரவு, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் மத்தியக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று கடைசி நாய் ஆய்வுக்காக  நாகை மாவட்டம் வேட்டைக்காரன் இருப்பு, வேதாரண்யம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.