வங்கி, இன்சூரன்ஸ், மத்திய அரசு அதிகாரிகளை சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும்….சிவிசி வலியுறுத்தல்

டில்லி:

முறைகேடுகளை கண்டறியும் வகையில் மத்திய அரசு அலுவலகங்கள், இன்சூரன்ஸ், வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அலுவலகங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகளுக்கு சிவிசி ஒரு அறிவிக்கையை அனுப்பியுள்ளது. அதில்,‘‘முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும்.

சுழற்சி முறையிலான பணி நியமன கொள்கையை அமல்படுத்தாதது தான் முறைகேடுகளுக்கு காரணம். முக்கிய பதவிகளில் இருந்து வேறு பதவிக்கு மாற்றினாலே போதுமானது. இதற்கான ஊர் விட்டு ஊர் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது அந்தந்த நிறுவனங்களில் நிர்வாக கொள்கையை பொருத்ததாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதமே இது போன்ற அறிவிக்கையை சிவிசி அனுப்பியது. வங்கிகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த சமயத்தில் சிவிசி இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.