காவிரி வழக்கை இழுத்தடிக்கும் மோடி அரசு: உச்சநீதி மன்றத்தில் மேலும் 2 வாரம் அவகாசம் கோருகிறது

டில்லி:

காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசம் தேவை என்று மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் கோரி யுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி வழக்கை மோடி தலைமையிலான மத்திய அரசு வேண்டுமென்றே இழுத்தடித்து வருவது மீண்டும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

காவிரி வழக்கில் உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாமல் கடைசி நாளன்று,  ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனு செய்தது. இந்த மனுமீதான விசாரணை கடந்த மாதம் 9ந்தேதி நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள், மே3ந்தேதிக்குள், காவிரி விவகாரம் குறித்து  வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அது மத்திய அரசின் கடமை என்றும் கூறியது வழக்கின் அடுத்த விசாரணயை மே 3ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

மேலும், மத்திய அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாது வருத்தமளிக்கிறது என்றும்,  இறுதி நேரத்தில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியது.

இந்நிலையில் வழக்கு அடுத்த மாதம்  மே 3ந்தேதி (அடுத்த வாரம்) விசாரணைக்கு வர உள்ள நிலையில், மேலும் 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய அரசின் மாற்றந்தாய் மனப்பாங்கு தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பான  சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.