டெல்லி: மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா  வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன் மாதம் முதல் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போது 4ம் கட்ட சில நாட்களாக மத்திய அரசு அறிவித்து வருகின்றது. குறிப்பாக, மெட்ரோ ரயில் சேவை வரும் 7ம் தேதி முதல் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு: கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டிருக்கும். உடல் வெப்ப சோதனைக்கு பின்னர் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும்.

சமூக விலகலை கடைபிடிக்க சில ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது.  பயணத்தின் போது குறைந்தளவு பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். சமூக விலகல் என்பதை உணர்த்தும் வகையில், ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளிலும் குறியீடு வரையப்பட்டிருக்கும்.

பயணிகள், ஊழியர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம். அப்படி வராத பயணிகள் இருந்தால், அவர்களிடம் கட்டணம் பெற்று கொண்டு மாஸ்க் வழங்கப்படும். ஆரோக்கிய சேது செயலி பயன்படுத்துவது ஊக்கப்படுத்தப்படும். ரயில் நிலைய நுழைவு வாயில்களில் சானிடைசர்கள் வைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில், ரயில், சாதனங்கள், லிப்ட், தானியங்கி படிக்கட்டு, கழிப்பறை உள்ளிட்டவை சுத்தப்படுத்தப்படும்.

ஸ்மார்ட் கார்டு, ரொக்கமில்லாத, ஆன்லைன் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். ரயிலில் ஏறும் போதும், இறங்கும் ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு போதிய நேரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.