ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆணை

டெல்லி: ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

ஆனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் ஊடரங்கால் வேலை இழந்துள்ளனர். அதன் காரணமாக அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந் நிலையில்,  ஊரடங்கால் இடம்பெயர்வோரின் நடமாட்டத்தை தவிர்க்க எல்லைகளை மூடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன்  வீடியோ மூலம் உரையாற்றிய ​​அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கபா மற்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நடமாட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட மற்றும் மாநில எல்லைகளை சீல் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நகரங்கள் அல்லது நெடுஞ்சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் செயல்பட வேண்டும். அத்யாவசிய பொருட்களின் இயக்கம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கு மாவட்ட நீதிபதிகள் மற்றும் எஸ்.பி.க்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.